Monday, 8 September 2014

சிறுகதை
பறக்க ஆசைப்பட்ட செழியன்
ஒரு கிராமத்துல செடியன்னு ஒரு பையன் இருந்தான். அவன் செடி உயரம்தான் வளர்ந்திருந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். செடியனுக்கு பறவைகள் போல பறக்க ஆசை.
ஆனா நாம மற்றவர்கள் மாதிரி சராசரி உயரம் இல்லையே. நம்மால பறக்க முடியுமான்னுஒரு சந்தேகம்.சிட்டுக் குருவிக்கிட்ட தன்னோட சந்தேகத்தை கேட்டான் செடியன்.
செடியா! நான் உன்னைவிட உருவத்தில் ரொம்பச் சிறியவன். ஆனால், என்னாலயே பறக்க முடியும்போது, உன்னால பறக்க முடியாதா என்ன?” எனத் தன்னம்பிக்கையை செடியன் மனசுல வளர்த்துச்சு.
ஆமாம். ஆமாம். என்னால பறக்க முடியும்என்று சொல்லிக் கொண்டே ஆற்றுப் பக்கம் வந்தான் செடியன். அங்கு நாரைகள் மீன்களைப் பிடிச்சு சாப்பிட்டுக் கொண்டே இருந்தன.
செடியன் ஒரு நாரையின் அருகே சென்றான் பறவையே எனக்கு ஒரு உதவி செய்வாயா?” எனக் கேட்டான்.
என்ன உதவி?” எனக் கேட்டது நாரை.
உன்னோட இறக்கையில இருந்து ஒரே ஒரு இறகைத் தரியா. நான் பறக்கணும்னுகேட்டான். அந்த நாரையும் ஒரு இறகைத் தந்தது.
மகிழ்ச்சியோடு வாங்கி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். இதுபோல பல நாரைகளிடம் இருந்து ஒவ்வொரு இறகாக வாங்கி சேகரித்துக் கொண்டான்.
அங்கிருந்து மகிழ்ச்சியோட கிளம்பி, கோயில் அருகே வந்தான். அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் பேசினான்.
பாட்டி.. பாட்டி.. இந்த இறகுகளை பறவை இறகுகள் மாதிரி கட்டிக் கொண்டு பறக்கப் போகிறேன். எனக்கு இறகுகளை கட்டிக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டான் செடியன்.
நான் கட்டிக் கொடுத்தால் எனக்கு நீ என்ன தருவ?” என்று கேட்டார் பாட்டி.
நான் பறந்து போய் மலைக்கு அந்தப் பக்கம் இருக்கிற பூக்களைப் பறித்து வந்து கொடுக்கிறேன்னுசொன்னான் செடியன்.
பாட்டியும் இறகுகளை வைத்து கட்டிக் கொடுத்தார். அதை உடம்பில் கட்டிக்கொண்டு மலை உச்சிக்குப் போனான். அங்கிருந்து பறக்க முயற்சி செய்தான்.
ஆனால் செடியனால் பறக்க முடியலை.
பறவை இறகுகளைக் கட்டினால் மட்டும் நம்மால் பறந்துவிட முடியுமா என்ன? எவ்வளவோ முயற்சி செய்தான். அவனால் பறக்க முடியவில்லை. தோல்வி அடைந்த அவன் கோபத்தில் உடம்பில் கட்டியிருந்த இறகுகளைக் கழற்றி வீசினான்.
அது மலையின் கீழே ஓடிக்கொண்டிருந்த நதியில போய் விழுந்தது. நீரினால் வேகமாக அடித்துச் செல்லப்பட்ட அந்த இறகுகள் அந்தக் கரையில் குளித்துக்கொண்டிருந்த காட்டு இளவரசியின் கால்களைச் சுற்றிக் கொண்டது.
இளவரசி அதனைக் கையில் எடுத்தாள். இவ்வளவு இறகுகளுடன் யார் இதை இங்கே அனுப்பியது என்று தெரிந்துக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
தனது சேவகர்களோடு அந்த மலைமீது ஏறிவந்தாள் இளவரசி. அங்கே செடியன் ஒரு மரத்தைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான்.
சேவகர்களோடு வந்த இளவரசி, “யார் நீ? ஏன் அழுகிறாய்?” என்று கேட்டாள்.
செடியன், தனது கதையைச் சொன்னான்.
இளவரசி சிரித்தாள்.
நாமெல்லாம் மனிதர்கள். நம்மால் பறக்க முடியாது. ஆனால், சாதனை செய்ய முடியும். உன்னைப் பார்த்ததும் எனக்குப் பிடித்துவிட்டது. நகைச்சுவையாகவும் பேசுகிறாய். அதனால உன்னை அரண்மனையில் நகைச்சுவை மன்றத்தின் தலைவனாக நியமிக்க ராஜாகிட்ட சொல்றேன்என்றாள்.
இதைக் கேட்டதும் செடியனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்று முதல் அவன் வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பித்தது. கிடைத்த சம்பளத்தில் தனக்கு உதவிய அத்தனை பறவைகளுக்கும் தானியங்களை வாங்கி வந்து கொடுத்தான்.
பறவைகளும் சந்தோஷத்தில் செடியனை வாழ்த்தின.



சிறுகதை
ஜெனீஃபர்
ஜெனீஃபர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளது தாய், தந்தை இருவரும் ஒரு சாலை விபத்தில் இறந்து போனதால் ஜெனீஃபர் தனது தாத்தா, பாட்டி பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தாள்.
அவளின் பாட்டி மார்கரெட் ஒரு ஆசிரியை, தாத்தா மார்டின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ஜெனீஃபரின் தாத்தா, பாட்டி இருவரும் கோடை வெயிலில் நிழல் தரும் மரம் போலத் தங்கள் பேத்தியைக் காப்பாற்றி வந்தனர்.
வகுப்பில் அவள்தான் முதல் மாணவி. ஜெனீஃபரின் பாட்டி ஆசிரியர் என்பதால் அவளுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் ஒருசேர போதித்தார். பணிவு, தாழ்மை, அன்பு, நேர்மை இவைகளையே அவளுக்கு அணிகலன்களாக அணிவித்து மகிழ்ந்தனர் தாத்தா, பாட்டி இருவரும்.
அதே சமயம், தாத்தா மார்டின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்பதால் வீரத்தையும் விவேகத்தையும் தனது பேத்திக்கு நாளும் கற்றுத் தந்தார். ஜெனீஃபர், தான் மாவட்ட ஆட்சித் தலைவராகி ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று அடிக்கடி தன் தாத்தாவிடமும், பாட்டியிடமும் கூறுவாள்.
ஜெனீஃபர் எல்லா உயிரினங்களிடமும் இறைவன் இருப்பதாக நினைப்பவள்.
ஒரு முறை தன் பேத்திக்காக தாத்தா மார்ட்டின், அழகிய கிளியை அதன் கூண்டுடன் வாங்கி வந்தார்.
“”அம்மா, ஜெனீஃபர் பார்த்தாயா, நான் உனக்கு அழகிய கிளியை வாங்கி வந்துள்ளேன். இது பேசும் கிளியம்மாஎன்று ஆசையாக தன் பேத்தியிடம் கூறினார்.
“”தாத்தா, ரொம்ப நன்றி…. ஆனால், இந்தக் கூண்டுக்கிளி எனக்கு வேண்டாம். சுதந்திரமாகப் பறந்தால்தான் அது பறவைஇல்லாவிட்டால் அது நம் அடிமை. எல்லாப் பறவைகளும் சுதந்திரமாக இருக்கத்தான் விரும்பும். என்னை நீங்கள் ஓர் அறையில் அடைத்து வைத்து விட்டால் நான் எவ்வளவு கஷ்டப்படுவேன். அது போலத்தானே இந்தக் கிளியும் கஷ்டப்படும். இந்த கிளியும் சுதந்திரப்பறவைதானே..! இதோ இப்போதே இதைப்பறக்கவிட்டு விடுகிறேன் பாருங்கள்என்று பேசிக் கொண்டே கூண்டைத் திறந்து விட்டாள்.
அவ்வளவுதான்அந்தக் கிளி சுதந்திரம் கிடைத்த சந்தோஷத்தில், ஜெனீஃபருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவளை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே வேகமாகப் பறந்து சென்றது.
எண்ணம் நல்லதாக இருந்தால் எங்கும் சந்தோஷமாக இருக்கும் என்பதால் ஜெனீஃபர் எப்போதும் நல்லவற்றையே சிந்திப்பாள். தன்னை அறியாமல் செய்யும் தவறுகளைப் பற்றிக்கூட கவலைப்படுவாள். அதை உணர்ந்து தனது சிறிய தவறையும்கூட பெரிதாக நினைத்து அதனைச் சரிப்படுத்த முயற்சிப்பாள்.
மற்றவர்களிடம் இருக்கும் குறைகள் பெரிதாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களையே பெரிதாகக் கருதுவாள். தன்னுடன் பழகும் அனைவரிடமும் அன்பாக இருப்பாள். அதனால், அவளுடன் பயிலும் மாணவிகள் அவளுடன் பழக ஆவலாக இருப்பார்கள்.
ஒரு முறை ஜெனீஃபர் பள்ளியில் ஒரு நாடகத்தில் நடிக்க தன் பெயரையும் கொடுத்திருந்தாள். அவள் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள் என்ற வதந்தியை நம்பி தன்னை அழகு செய்து கொண்டு பல நாட்கள் ஒத்திகையும் பார்த்துக் கொண்டாள். ஒத்திகையின் போது அவள் சிறப்பாக நடிப்பதைக் கண்டு தாத்தாவும், பாட்டியும் ஆச்சரியப்பட்டார்கள்.
“”அம்மா ஜெனீஃபர் நீ நடிக்கிற இந்த நாடகத்திற்குத் தானம்மா முதல் பரிசு கிடைக்கும்என்று தாத்தா கூறினார்.
அன்று பள்ளிக்குச் சென்ற போது அவள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற ஏமற்ற செய்தியே அவளுக்குக் கிடைத்தது. அன்று மாலை வீட்டிற்குத் திரும்பியதும் அவள் தன் தாத்தாவிடம் “”தாத்தா, நான் நாடகம் நடக்கும்போது அதை ரசித்துக் கைதட்டத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்என்று சிரித்தபடியே கூறினாள்.
தன்னைத் தாழ்த்துபவன் உயர்கிறான் என்பதை தாத்தா உணர்ந்து கொண்டார். அது முதல் தாத்தா அவருக்கு எப்பொழுதாவது வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால் மனத் தளர்ச்சி ஏற்பட்டால் தனது பேத்தி ஜெனீஃபர் சொன்னதை நினைத்துக் கொள்வார். ஜெனீஃபருக்குக் கிடைத்த ஞானம் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவார்.
ஜெனீஃபர் ஒரு நாள் கூட பள்ளிச் செல்லத் தவறியதே இல்லை. ஒரு நாள் அவளுக்கு நல்ல காய்ச்சல். பாட்டி அவள் உடம்பு அனலென சுடுவதைக் கண்டு மனம் வருந்தி மருந்து கொடுத்து, போர்வையைப் போர்த்தி படுக்க வைத்தார்.
காலை மணி 8 அடித்தது. அவ்வளவுதான்ஜெனீபர் போர்வையை உதறி மடித்து வைத்துவிட்டு, கை, கால்களைக் கழுவி பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகி, புத்தகப் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வேகமாகப் புறப்பட்டாள்.
அப்போது, அங்கு வந்த தாத்தா,”"அம்மா ஜெனீபர்உனக்குத்தான் நல்ல காய்ச்சலாச்சேஒரு நாள் பள்ளிக்கூடம் போகவில்லை என்றால் என்னம்மா? பேசாமல் படுத்து ஓய்வு எடுத்துக்கொள். உடம்பை அலட்டிக் கொள்ளாதேஎன்றார்.
“”பள்ளிக்கூடம் போகாமல் இருக்கலாமா? ஒரு நாள் பள்ளிக்கு நான் போகவில்லை என்றால், ஆசிரியர் நடத்தும் பாடத்தை கேட்க முடியாமல் போகும். அதனால் எனக்குத்தானே நஷ்டம். ஓய்வு என்ற போர்வையில் வெறுமனே படுத்திருந்தால் நோய் தான் வரும் தாத்தா. ஆண்டவனின் அருளும் பாட்டி மற்றும் உங்களின் அன்பும், ஆசீர்வாதமும் இருக்கும் போது எனக்கு ஒரு நோயும் குறையும் அண்டாது தாத்தாஎன்று சொல்லிக்கொண்டே பள்ளிக்கு நடைபோட்டாள் ஜெனீஃபர்.
ஒரு நாள் கூடத் தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஜெனீஃபரின் மன உறுதியைக் கண்டு வியந்தார் தாத்தா மார்டின்.
அன்று மாலை வீடு திரும்பிய ஜெனீஃபர் தன் பாட்டியிடம் அழகானதொரு புத்தகத்தைக் காட்டினாள்.
“”பாட்டி, இந்தப் புத்தகத்தை எனது ஆசிரியர் எனக்குப் பரிசாகக் கொடுத்தார். எனக்குக் காய்ச்சல் இருந்த போதும் பள்ளிக்கு வந்ததையும் நாள் தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற எனது குறிக்கோளையும் எனது ஒழுக்கத்தையும் வியந்து, பாராட்டி இந்த திருக்குறள் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார். அது மட்டுமா, இன்று அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் தேர்வுக்கான கால அட்டவணையையும் எழுதிப் போட்டார். இன்று நான் பள்ளிக்குச் செல்லவில்லை எனில் தேர்வையே மறந்திருப்பேன். நான் படிக்கப் போகிறேன்..என்று கூறிவிட்டுப் பாடப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டாள்.
அடுத்த நாள், பள்ளியின் ஆண்டு விழா. பள்ளியே விழாக் கோலம் பூண்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வென்றதற்கான பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், தலைமையாசிரியரும் ஆசிரியர்கள் அனைவரும் பதற்றமாக இருந்ததோடு, அரங்கத்தில் அவர்கள் கண்கள் யாரையோ தேடிக் கொண்டிருந்தன.
ஏனெனில், அன்று ஆண்டு விழாவின் முத்தாய்ப்பாக நாடகம் நடைபெறுவதாக இருந்தது. நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்கவிருந்த மாணவி அன்று உடல்நலக் குறைவால் பள்ளிக்கு வரவில்லை.
ஜெனீஃபர், தன் தாத்தாவும், பாட்டியும் பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க வேண்டும் என்று அழைத்துச் சென்றிருந்தாள்.
“”அதோ, ஜெனீஃபர் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் பாருங்கள் டீச்சர்…” என்று வகுப்பு ஆசிரியர் கூறியவுடன்தான் தலைமையாசிரியருக்கு உயிரே வந்தது.
அவர் ஜெனீஃபர் அருகில் வந்து, தனது இக்கட்டான நிலைமையை எடுத்துரைத்து, நாடகத்தில் நடித்து பள்ளிக்கு நற்பெயர் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். ஜெனீஃபரும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், தலைமை ஆசிரியரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நாடகத்தில் நடித்தாள்.
அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் சிறந்ததாக அந்த நாடகமே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜெனீ ஃபரும் அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றதோடு, சிறந்த நடிப்புக்கான பரிசையும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றாள். தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் ஜெனீஃபரின் நடிப்பைப் பாராட்டி வாழ்த்தினர்.
“”அம்மா, உன் நடிப்பு பிராமதம்! உன் நம்பிக்கை வீண் போகவில்லைமுயற்சி திருவினையாக்கும்என்று சொல்லி தாத்தாவும், பாட்டியும் கண்ணீர்த்துளியுடன் ஜெனீஃபரை ஆரத் தழுவிக் கொண்டனர்.


சிறுகதை
தினந்தோறும் ஞாயிறாய்

அறிவழகனுக்கு ஞாயிறுஎன்றால் ரொம்பப் பிடிக்கும். தினந்தோறும் ஞாயிறாய் இருக்கக் கூடாதா என்று ஏங்காத நாளே இல்லை எனலாம்.
அவனுக்கு அவ்வளவு பிடிக்குதே, அந்த ஞாயிறில் அப்படி என்னதான் இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். உங்களுக்குத் தெரியாததா? இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள்.
ஞாயிறென்றால், அதிகாலையில் எழத் தேவையில்லை. ஜாலியாக 8, 8.30 வரை கூடத் தூங்கலாம். ஞாயிறன்றுதான் அம்மா அவனுக்குப் பிடித்த பலகாரங்கள் செய்வார்.
சனிக்கிழமையே வீட்டுப்பாடம் எல்லாம் முடித்து விடுவதால் ஞாயிறன்று தம்பியுடன் சேர்ந்து நன்றாக விளையாடுவான். வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாட, சிறிது நேரம் அதிகமாக அம்மா அனுமதிப்பாள். தாத்தாவோ நிறையக் கதைகள் சொல்வார். ஓவ்வொரு ஞாயிறன்றும் அப்பா தவறாமல் ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்வார். அது பூங்காவோ, மியூசியமோ, “பீச்”-ஓ எதுவாகவும் இருக்கும். கம்ப்யூட்டர் கேம் கூட விளையாட அனுமதி கிடைக்கும். அன்று எத்தகைய கட்டுப்பாடும் இருக்காது. ஜாலியோ ஜாலி. அட, அதனால்தான் அறிவழகனுக்கு ஞாயிறு கொள்ளைப் பிரியம், பின்னே இருக்காதா? என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.
அன்றும் அப்படித்தான்ஞாற்றுக்கிழமை முடிந்து விட்டதே, மீண்டும் ஞாயிறுவருவதற்கு இன்னும் 6 நாட்கள் காத்திருக்க வேண்டுமே எனும் வருத்தத்துடன் படுக்கைக்குச் சென்றான் அறிவழகன்.
மறுநாள் காலை அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், மறுநாளும் ஞாயிறுதான்.
ஆனால் நேற்றுப் போன ஞாயிறைவிட இன்று கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. அம்மா அவனை இன்று அதிகாலையிலேயே எழுப்பிவிட்டார். நேற்றைவிட சற்றுக் குறைவான அளவே விளையாடவும் அனுமதித்தார். அப்பாவும் சிறிது நேரமே வெளியே கூட்டிச் சென்றார். தாத்தா ஒரே ஒரு கதை சொன்னார். தம்பியும் விளையாட சோம்பல்பட்டான். அன்றைய நாளும் கழிந்தது.
மறுநாள் காலை, என்ன ஆச்சரியம்! காலண்டரைப் பார்த்தான். அன்றும் ஞாயிறுஎன்றே எழுதியிருந்தது. அப்பாடா! ஆனால் இது என்ன தம்பியைக் காணோம்! அம்மா தமிழ் (தம்பி பேர் தமிழழகன்) எங்கேம்மா?’ “அவனா, ஸ்கூலுக்குப் போய்ட்டான்
ஸ்கூலாஎன்று கேட்க,
நீதான் எவ்வளவு எழுப்பியும் எழவில்லையேஎன்று அம்மா சொல்ல அவனுக்கு ஓன்றுமே புரியவில்லை.
நேராகத் தாத்தாவிடம் சென்றான். தாத்தா கதை சொல்லுங்கஎன்றான். அவர் அன்றைய தினமணி பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார். எனக்கு டைம் இல்லை. பேப்பர் படிக்கணும், காய் வாங்கப் போகணும், என் பிரண்ட் வீட்டுக்குப் போகணும்என்றார். அறிவழகனுக்கு வருத்தமாகப் போய்விட்டது.
அம்மாவிடம் ஓடி வந்தவன் அம்மா எனக்கு அதிரசம் சுட்டுத் தாம்மாஎன்றான் அன்பொழுக. அம்மாவோ காலையிலேர்ந்து வேலையே சரியா இருக்கு. மதியம் சாப்பாடு செய்யணும். கோதுமை கிளீன் பண்ணி அரைக்கக் கொடுக்கணும். அரிசி கழுவி காய வைக்கணும். எல்லோருடைய டிரஸ்ûஸயும் அயர்ன் செய்யணும். போ, போய் டிபன் சாப்பிடுஎன்று கொஞ்சம் சத்தமாக சொல்லவே அவனுக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது.
டிபன் சாப்பிட்டுவிட்டு, நண்பர்களுடன் விளையாட வெளியில் வந்தால், தெருவில் யாரையும் காணோம். போர் அடித்தது.
எப்படியோ மாலை வந்தது. அப்பா வந்து விட்டார். அப்பா, அப்பா பார்க்குக்கு போலாம்பா
அலுவலகப் பணி விஷயமாக ஆழ்ந்த யோசனையில் இருந்த அவர் போ போயீ வேலையைப் பார்என்று அதட்டினார். அழுது கொண்டே தன் அறைக்கு வந்தால் தம்பி அங்கு வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தான். அம்மா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். சோர்வுடன் வந்த தன் மகனை கூப்பிட்டார் அம்மா, “ஏய் அறிவு! இங்க வா!அம்மா இந்த மாதிரி அதட்டிப் பேசறதில்லையேஎன்று எண்ணியவனுக்குக் கண்ணில் குபுகுபுவென்று கண்ணீர் கொட்டியது.
நானும் காலையிலேர்ந்து பார்க்கிறேன். முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டிருக்கே. செல்லம் அதிகமாயிடுச்சுஉன்னை ஏதாவது ஹாஸ்டல்லே சேர்த்திடலாமான்னு யோசிக்கறேன்
அம்மா, வேண்டாம்மா, உன்னைவிட்டு நான் எங்கும் போகமாட்டேன் அம்மா, அம்மாஎன்று புலம்பியவனை, அம்மா வந்து எழுப்பினார். அறிவு, செல்லம், என்னடா ஆச்சு? தூக்கத்தில் கெட்ட கனவு ஏதாவது கண்டியா?’
அட இத்தனையும் கனவா? தன் அம்மாவிடம் தான் கனவாகக் கண்டதைக் கூறினான் அறிவழகன். மடியில் முகம் புதைத்தவனின் தலைமுடியை அம்மா செல்லமாகக் கோதிவிட்டார்.
அறிவு! இங்கே பாருப்பா, உலகத்திலே எந்த ஒரு உயிரும் தினமும் ஓய்வா இருக்க விரும்பறதில்லை. இது இயற்கையோட நியதி. சின்னக் குருவி கூட உணவு தேடிப் போகும். உழைச்சாதான் நாம உடல்நலத்தோட இருக்கமுடியும். நானும் உன் அப்பாவும் ஓய்வாகவே இருக்க நினைச்சிருந்தா, உங்களை எல்லாம் யார் கவனிப்பாங்க? இப்ப பாரு, உங்க தாத்தா இளமையிலே உழைச்சாருஇப்ப ஓய்வா இருக்காரு. அதே போலத்தான் நானும், நீயும். இப்ப நீ டெய்லி ஸ்கூலுக்குப் போய் உழைச்சா, எதிர்காலத்திலே நிம்மதியா இருக்கலாம். நிழலின் அருமை வெயிலில் தெரியும்பாங்க. இந்தத் திங்கள்,செவ்வாய் எல்லாம் இருக்கறதாலதான் ஞாயிறுநமக்கு நல்லா இருக்கு!என்று நிதானமாக அம்மா விளக்க, தெளிவடைந்தவனாக, அறிவு புன்னகைத்தான்.
என்ன நீங்களும் டெய்லி அம்மாவுக்குத் தொல்லை தராம ஸ்கூலுக்குப் போற பிள்ளைங்கதானே!


சிறுகதை 
அச்சாணி
மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, “”டேய் சிவா, உங்கப்பாவை இன்னிக்கு எங்க தெருவுல பார்த்தேண்டாஎன்றான்.
இதைக் கேட்ட சிவாவின் முகம் மாறியது. கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கியது. அதை மறைத்துக்கொண்டு, “”அதுக்கு என்னடா இப்ப? அதுதான் பார்த்தேல்ல, இதைப்போய் பெரிய செய்தியாட்டமா அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்கியே?” என்று கடுகடுத்தான். உடனே நண்பர்கள் சிவாவையே உற்று நோக்கினர்.
சிவாவும் கோபுவும் ஒரே வகுப்புதான் என்றாலும், எப்போதும் இருவருக்கும் ஆகாது. காரணம், கோபு பணக்காரன்; சிவா ஏழை. அந்த வகுப்பிலேயே தான்தான் மிகுந்த பணக்காரன் என்ற கர்வம் கோபுவுக்கு உண்டு. அதேபோல அந்த வகுப்பிலேயே தான்தான் மிகுந்த ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையும் சிவாவுக்கு உண்டு. இதுதான் அவர்களை நட்பு முறையில் நெருங்க விடாமல் செய்தது. ஆனால் சிவா எல்லோரிடமும் அன்பாகப் பழகுவான்; நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்குவான்.
நல்ல மாணவன்என்று ஆசிரியர்களால் பாராட்டப்படுவான். எல்லோருக்கும் வலியச் சென்று உதவி செய்வான். ஆனால் கோபு அவனுக்கு நேர்மாறாக இருந்தான். அனைவரிடமும் தன் பணக்காரத் திமிரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்காட்டியும், குத்திக்காட்டியும் அவரவர்கள் தந்தை செய்யும் தொழிலைப் பழித்துப் பேசியும் கேலி செய்தும் நிரூபிப்பான்.
கோபு, வேண்டுமென்றே, சிவா தன் நண்பர்களோடு இருக்கும் சமயம் பார்த்து, “உங்க அப்பாவை இந்தத் தெருவுல பார்த்தேண்டா; அந்தத் தெருவுல பார்த்தேண்டாஎன்று கூறி தன் நிலையை உயர்த்திக்கொள்வான். காரணம், கோபுவின் அப்பா பிசினஸ்மேன். அவன் தினமும் பள்ளிக்குக் காரில்தான் வந்து இறங்குவான் என்றால், அவனுடைய கர்வத்துக்குக் கேட்கவா வேண்டும்!
ஆனால், சிவாவின் அப்பா பழைய பேப்பர் கடை வைத்திருக்கிறார். கடையில் வேலை செய்பவர் விடுமுறையில் போய்விட்டால், தானே தெருத்தெருவாகச் சென்று பழைய பேப்பர், புத்தகங்களை வாங்கி வருவார். அதைத்தான் கோபு அடிக்கடி இப்படிச் சொல்லிக்காட்டி சிவாவை மட்டம் தட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. சிவாவை சீண்டிப் பார்ப்பதில் ஓர் அற்ப சந்தோஷம்.
அவனுடைய திமிரை அடக்க, தக்க தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தான் சிவா.
“”ஏண்டா சிவா, உங்க அப்பா ஏண்டா கோபு இருக்கும் தெருவுக்குப் போனாரு? அவருக்கு வேற வேலையே இல்லையா? தெருத்தெருவா அலையற வேலைதானாமே…” இப்படிக் கிண்டலடித்தான் கோபுவின் நண்பன் செந்தில். கோபுவின் நண்பன் அவனைப் போலத்தானே இருப்பான்!
சிவாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. “”சரி, வாடா சிவா, இதுக்குப்போய் ஏண்டா வருத்தப்படுறே, இந்தப் பயலுக பேசறதையெல்லாம் சீரியசா எடுத்துக்காதடாஎன்று ஆறுதல் கூறினான் சிவாவின் நண்பன் கணேஷ்.
“”இல்லடா, எங்கப்பா எனக்கு புதுப் புத்தகமே வாங்கித் தரமாட்டாருடா. வருஷா வருஷம் கடைக்குக் கொண்டுவர்ற பழைய புத்தகங்களைத்தான் படிக்கச் சொல்லுவாரு. இல்லேன்னா, உனக்கு முன்னாடி படிச்சவங்ககிட்டேருந்து பழைய புத்தகம் வாங்கிப் படின்னு சொல்லுவாரு. புது புக் வாங்கிப் படிக்க பணமில்லாதவன்னுஅடிக்கடி குத்திக்காட்டிப் பேசறாண்டா இந்த கோபுசொல்லிவிட்டு அழுதான் சிவா.
“”அட, உனக்கு ஒண்ணு தெரியுமா? பழைய புத்தகத்துலதான் நிறைய முக்கியமான கேள்வி எல்லாம் குறிச்சி வச்சிருப்பாங்க. குறிப்பெல்லாம் எழுதி வச்சிருப்பாங்க. அதைப் படிச்சாலே போதும்டாநாம 60 மார்க் எடுக்கலாம். நீ கொடுத்து வச்சவன்னு நினைச்சுக்கோ. எங்களுக்கெல்லாம் ஏன்தான் புது புக் வாங்கித் தர்றாங்களோன்னு இருக்கு. புது புக்கைப் பார்தால் எதைப் படிக்கிறதுன்னு ஒண்ணுமே தோணாது. உனக்கு அப்படி இல்லையே! அதுதான் நீ நிறைய மார்க் எடுக்குற?” என்று கணேஷ் கூறி முடிக்கவும் பள்ளி மணி அடித்தது. உடனே இருவரும் கைகோர்த்தபடி வகுப்புக்குள் நுழைந்தனர்.
வகுப்பில் உட்கார்ந்திருந்த சிவா, கணேஷை நினைத்துப் பார்த்தான். இவன் எப்போதும் இப்படித்தான்! ஆபத்தான நேரத்தில் உதவுவான். கவலையா இருக்கும்போது ஆறுதல் கூறித் தேற்றி, உற்சாகப்படுத்துவான். கணேஷ் மாதிரி ஒரு நண்பன் கிடைச்சிருக்கப்ப, கோபுவைப் போல ஒரு திமிர் பிடித்தவன் பேச்சைக் கேட்டு நாம ஏன் கவலைப்படணும்என்று நினைத்துக் கொண்டான்.
அன்று பள்ளி விடுமுறை என்பதால், சிவா அப்பாவோடு கடைக்குச் சென்று பேப்பரைத் தனியாகவும் புத்தகங்களைத் தனியாகவும், பால் கவர்களைத் தனியாகவும் பிரித்து வைத்து அப்பாவுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தான். நிறைய மாதப் பத்திரிகைகள், காமிக்ஸ் புத்தகங்கள் வந்திருந்தன. அப்போது அவன் கையில் தட்டுப்பட்டது அது. அட, இது எப்படி அதுக்குள்ளே நம்ம கடைக்கு வந்தது? என்று நினைத்தவன் அதை எடுத்துப் பத்திரப்படுத்தினான்.
“”அப்பா, நேத்திக்கு நீ எந்த ஏரியாவுக்குப் போன?” சொன்னார்.
“”எந்த வீட்டுக்குப் போன?” சொன்னார். சொல்லிவிட்டு, “”ஏண்டா, அதையெல்லாம் கேக்கற? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு? வடையைத் தின்னுடான்னா, தொளைய எண்ணிக்கிட்டிருக்கியே…” என்றார்.
சிவா மெüனமானான். அப்பாவைப் பெருமைப்படுத்த தக்க தருணம் கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தான்.
சனி, ஞாயிறு விடுமுறையை அடுத்து, திங்கள்கிழமை பள்ளிக்கு வந்ததிலிருந்து கோபு மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டான். தன் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாமல், அடுத்தடுத்த வகுப்பு மாணவர்களிடமும் சென்று ஏதோ சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சிவா, கண்டும் காணாததுபோல இருந்தான். மேலும், ஆண்டுத் தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே இருந்ததால் தேர்வுக்குப் படிப்பதில் தீவிரம் காட்டினான். அங்கு வந்த நண்பன் கணேஷிடம், “”என்னடா ஆச்சு, இந்த கோபுவுக்கு? இப்படி இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவிக்கிறானே?” என்றான் சிவா.
“”அவனோட இங்கிலீஷ் புக்கைக் காணோமாண்டா, எவனோ சுட்டுட்டானாம்என்றான் கணேஷ்.
“”அவன்தான் பணக்காரனாச்சே, புதுசு எவ்வளவு வேணுமானாலும் வாங்கிப் படிக்கலாமே…”
“”இல்லேடா சிவா, அவனோட புத்தகத்துல நிறைய முக்கியமான கேள்வி எல்லாம் குறிச்சி வச்சிருந்தானாம். அதை மட்டும்தான் ஆண்டுத் தேர்வுக்குப் படிக்க இருந்தானாம். இப்ப போய் புது புக் வாங்கினா, புத்தகம் முழுசுமா படிக்க முடியும்? ஒரு வாரம்தானே இருக்கு? அதுதான் தவிக்கிறான்சிரித்தான் கணேஷ்.
“”அதுதான் ரெண்டு நாளா என்னைக் கேலி பேச, என் பக்கமே அந்தப் பய வரலையா?” என்றான் சிவா.
அன்று வகுப்பறையில் ஆங்கில ஆசிரியரிடம் சொல்லி அழுது கொண்டிருந்தான் கோபு.
ஆசிரியர் மாணவர்களை நோக்கி, “”யாராவது கோபுவுக்கு இங்கிலீஷ் புத்தகம் கொடுத்து உதவுங்கள். அவனோட புத்தகம் தொலைஞ்சிடுச்சாம்என்றார்.
எல்லோரும் அமைதியாக இருந்தனர். யாருமே கொடுக்க முன் வரவில்லை. காரணம் முதல் பரீட்சை, ஆங்கிலம் என்பதால் சிலர் தாங்கள் படிக்க வேண்டும் என்று மறுத்துவிட்டனர்; சிலர் தாய்-தந்தை திட்டுவார்கள் என்று கூறிவிட்டனர்; இன்னும் சிலர் கோபுவின் ஆணவத்தை அடியோடு வெறுப்பவர்கள். உடனே சிவா எழுந்து, “”சார் நான் வேணும்ன்னா தர்றேன். ஆனால் இரண்டு நாளுக்குள்ள திருப்பித் தந்திடச் சொல்லுங்க சார்என்றான்.
சட்டென எழுந்த கோபு,”"வேண்டாம் சார், சிவாவோட புத்தகம் எனக்கு வேண்டவே வேண்டாம். அவனோட புத்தகத்தையா நான் படிக்கணும்?” என்றான் ஆணவத்துடன்.
கோபுவின் குணமும் பணக்காரத் திமிரும் ஆசிரியருக்குத் தெரியுமாதலால். “”சரி, எப்படியாவது படிச்சு பரீட்சை எழுது, இப்ப அழாம உட்கார்என்றார்.
சிவாவுக்கு மனம் கேட்கவில்லை. நாளைக்கு எப்படியும் ஆசிரியரிடம் அதைச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். அன்று மதியம்தான் ஆங்கில வகுப்பு என்பதால், மதியம் வரை பொறுமையாகக் காத்திருந்தான் சிவா.
ஆசிரியர் வகுப்புக்கு வருவதற்கு முன்பாக அவரைத் தனியாகச் சென்று சந்தித்து, “”இந்தாங்க சார், இதை நீங்களே அவனிடம் கொடுத்திடுங்கஎன்று கூறி அவர் கையில் எதையோ தந்துவிட்டு, சிலமணி நேரம் அவரிடம் ஏதோ சொல்லி அழுதான் சிவா.
ஆசிரியர், அவனை சமாதானப்படுத்தி அனுப்பினார்.
வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்ததும், கோபுவைக் கூப்பிட்டார். ஆசிரியர் அருகில் சென்று நின்ற கோபுவைப் பார்த்து, “”இந்தா, இதுதானே உன்னோட புத்தகம்?” என்றார்.
“”ஆமா சார், இது என்னோடதுதான் சார், இது எப்படிக் கிடைச்சது? யார் சார் எடுத்தாங்க? எனக்கு வேண்டாத யாரோதான் இதை எடுத்து வச்சு என்னை ரெண்டு நாளா அழ வச்சிருக்காங்க. அவங்களை உடனடியா நீங்க தண்டிக்கணும் சார்என்றான் கோபமாக.
“”இதோ பார் கோபு, உன்னோட புத்தகத்தை யாரும் திருடலை. உன்னோட கவனக்குறைவுதான் அதற்குக் காரணம். ஆனால் அதை தேடிக் கொடுத்தவங்களையே நீ தண்டிக்கச் சொல்றியா?” என்று கோபமாகக் கேட்ட ஆசிரியர், “”கோபு, நீ பணக்காரன் என்பதால் நீ சொல்வதையெல்லாம் எல்லோரும் கேட்டு அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்காதே! இது உன் வீடு அல்ல; பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்தில் ஏழை-பணக்காரன், ஏற்ற-தாழ்வு, சிறியவன்-பெரியவன் என்ற வேறுபாடெல்லாம் பார்க்கக்கூடாது.
இந்தப் புத்தகத்தை பத்திரமாகக் கொண்டுவந்து கொடுத்தது யார் தெரியுமா? நீ அடிக்கடி ஒருவர் செய்யும் தொழிலை கேவலமாகப் பேசி, அவருடைய மகனை அவமானப்படுத்திக் கொண்டிருந்தாயே சிவா, அவன்தான் கொடுத்தான். உழைத்து சம்பாதிக்கும் எந்தத் தொழிலும் தாழ்ந்ததல்ல. சிவாவின் அப்பா போன்றவர்கள் வீடுவீடாகச் சென்று பேப்பர் எடுக்கவில்லை என்றால் நாமெல்லாம் நம் வீட்டில் குப்பைகளைத்தான் சேர்த்து வைத்திருக்க வேண்டும்.
உன்னுடைய புத்தகம், உங்கள் வீட்டு வேலைக்காரி போட்ட நியூஸ் பேப்பருடன் கலந்து அவனுடைய அப்பா கடைக்குச் சென்றதால் உனக்குக் கிடைத்திருக்கிறது. இல்லையென்றால் எந்தக் கடையில் போய் நீ இதைத் தேடுவாய்? யாரையும், எந்தத் தொழிலையும் இனி கேவலமாக நினைக்காதே பேசாதே! நீ பத்தாம் வகுப்பு வந்துவிட்டாய். இனியாவது அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்.
“”உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
அதாவது, “பெரிய தேர் ஓடுவதற்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் இந்த உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழக்கூடாதுஎன வள்ளுவர் கூறிய இந்தத் திருக்குறளை உங்களுக்கு எத்தனை முறை நான் மேற்கோள் காட்டி பாடம் நடத்தி இருக்கிறேன். தேர் ஓடுவதற்கு அடிப்படையாய் இருப்பது அதன் அச்சாணிதான். அச்சாணி உருவத்தால் சிறியதுதான்; ஆனால் அதன் பயன் மிகப்பெரியது. அதுபோலத்தான் ஒருவரின் உருவத்தையோ அவர்கள் செய்யும் தொழிலையோ ஒருபோதும் கேவலமாகப் பேசக்கூடாது. ஏனென்றால் அவர்கள்தான் தக்க சமயத்தில் உதவக்கூடியவர்கள் இருப்பார்கள். நீ எவ்வளவுதான் சிவாவின் அப்பா செய்யும் தொழிலைக் கேவலப்படுத்தி, அவன் மனம் நோகப் பேசினாலும், உனக்கு தக்க சமயத்தில் அச்சாணியாக இருந்து உதவியவன் சிவாதான் என்பதை மறந்துவிடாதே! இனியாவது அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும் நடந்துகொள்ள முயற்சி செய்என்றார்.
கோபு வெட்கித் தலைகுனிந்தபடி, சிவாவிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தன் இடத்தில் வந்து அமர்ந்தான்.
மறுநாள் சைக்கிளில் வந்து இறங்கிய கோபு, “”குட் மார்னிங் சிவா, என்னையும் உன்னோட ஃபிரண்டா ஏத்துக்கிறியா?” என்றான்.
“”ஒய் நாட்?” என்று அவன் கையைப் பற்றிக் குலுக்கினான் சிவா.
இந்தக் காட்சியைக் கண்டு சிரித்துக்கொண்டே சென்றார் ஆசிரியர்.